சூறையாடியது புல் புல் புயல்..!

வங்கக் கடலில் உருவான புல்புல் புயல் மேற்கு வங்கம் அருகே கரையைக் கடந்து, வங்காளதேசத்தை நோக்கி நகர்ந்தது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இந்த புயல் பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுகள் அருகே நேற்றிரவு 8.30 மணியளவில் புல்புல் புயல் கரையை நோக்கி நகர்ந்தது.

சுமார் மூன்று மணி நேரம் வலுவான புயலாக கரையில் உள்ள பகுதிகளை சூறையாடியது.

சுமார் 10 அடி உயரத்திற்கு கடல் அலைகள் ஆர்ப்பரித்தன.

மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்திற்கு சூறைக்காற்று வீசியது.

புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழையும் கொட்டியது

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புல்புல் புயலால் பலகோடி ரூபாய் சொத்துகள் சேதம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்றரை லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர்ச்சேதம் குறித்து தகவல் ஏதுமில்லை என்று தெரிவித்த மம்தா பானர்ஜி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டிருப்பதாக கூறினார்.

புல் புல் புயலால் ஒடிசாவிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

புயல் காரணமாக கனமழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. புயலால் மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள் உள்பட பெரும் சேதம் ஏற்பட்டது.

குடிசை வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

கோதுமை அறுவடைக் காலத்தில் விளைநிலங்கள் பெருமளவுக்கு நீரில் மூழ்கின.

ஒடிசாவில் பாரதீப் மாவட்டத்தில் சாலைகளில் விழுந்துக் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே