அருண் பிரகாஷ் கொலைச் சம்பவம், தனிப்பட்ட விரோதமே அன்றி, மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை என்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது.
இராமநாதபுரம் வசந்தநகர் சாலையில் நின்று கொண்டிருந்த அருண் பிரகாஷ் (24) மற்றும் யோகேஸ்வரன் (20) ஆகியோரை நேற்று முன்தினம் மாலை 12 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியது.
இதில் அருண் பிரகாஷ் உயிரிழந்தார், பலத்த காயமடைந்த யோகேஸ்வரன் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் பிற்பகல் நண்பர்களான அருண் பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து, முன்விரோதம் காரணமாக வைகைநகரைச் சேர்ந்த சரவணன், சின்னக்கடையைச் சேர்ந்த சபீக் ரகுமான் ஆகியோரைத் தாக்கியுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த சரவணன், சபீக் ரகுமான் ஆகியோர் தங்களுடன் 10 பேரை அழைத்துக் கொண்டு வந்து மாலையில் அருண் பிரகாஷையும், யோகேஸ்வரனையும் கத்தியால் குத்தி தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தை மதரீதியிலான மோதலாக திரித்து சிலர் பரப்பியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இன்று விளக்கமளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
”அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை.
வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்” என்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.