ரூ.5 ஆயிரம் வழங்குக; மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை : ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழக அரசு ஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு உதவ வேண்டும். அனைவருக்கும் ரூ.5000 நிவாரணம் வழங்க வேண்டும், குறை சொல்ல முடியாத அரசாக இருக்க வேண்டும் என விரும்புவதால் சொல்கிறேன் என ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு:

‘அதிகரிக்கும் கரோனா பேரழிவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றி நடக்கவேண்டும். மக்களின் தேவைகளுக்காக உதவிகளை அரசு செய்து தர வேண்டும்.

அரசு அறிவித்த இழப்பீடுகள் போதாது. ஆரம்பத்தில் இருந்தே நான் குறிப்பிடும் ரூ.5000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

எடப்பாடி தொகுதியில் கூட உணவுப்பொருட்கள் இல்லாமல் பெரிய சோகை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குழந்தைகளுக்கு கஞ்சி மட்டுமே கொடுத்து நாளைப்போக்கியதாக செய்தி பார்த்தேன்.

விளிம்புநிலைக் குடும்பங்கள் சோகத்தை வெளியில் சொல்ல முடியாமல் முழுங்கிக் கொண்டிருக்கின்றன.

உணவுக்குக் கூட உத்தரவாதம் தர முடியாத நிலையில்தானா தமிழக அரசு உள்ளது?

மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் என களத்தில் நிற்பவர்கள் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

பரிசோதனைக் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் கைவசம் இல்லை. இருந்தாலும் வேலை செய்யவில்லை என காலத்தைக் கழித்தால் எப்போது நோய்த்தொற்றை ஒழிப்பது?

நகர்ப்புற நெரிசல் மிகுந்த பகுதியில் வீட்டுக்குள் நீர் இல்லை, கழிவறை வெளியில் உள்ளது. தனிமனித இடைவிலகல், கை கழுவுதல் என்பன இயலாத சூழலில் மக்கள் வாழும் பகுதியில் சிறப்பு அலுவலர்களை நியமித்து உதவிகளை வழங்கி கவனம் செலுத்த வேண்டும்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் பயன் அடைந்தவர்கள் பலரிடம் பேசுகிறேன். அவர்கள் அரசாங்கம் தங்களது தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

அரிசி பெறும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் மின்சாரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும். விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஊரடங்கு காலத்தை நீட்டித்துக் கொண்டிருப்பதோடு அரசின் கடமை முடிந்து விடுவதில்லை. ஊரடங்கு என்பது தொடக்கம்தான். தீர்வல்ல.

இவை அரசைக் குறை சொல்வதற்காக, அரசியலுக்காக சொல்லப்படுபவை அல்ல. குறை காண முடியாத எல்லோருக்குமான அரசாக மாற்றிக் கொள்ளுங்கள் என்னும் அக்கறையுடன் சொல்கிறேன்.

ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித்தொகையும், தடுப்பில் களப்பணியாற்றும் அனைத்துத் துறையினருக்கும் சிறப்பு ஊதியமும் வழங்கிட வேண்டும்.

மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும். ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை; அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை’.

இவ்வாறு ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே