நாமக்கல் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!!

நாமக்கல்லில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அரசுப் பள்ளி ஆசிரியரைக் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் மதிவாணன் (52). இவர் மீது அதே பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி மற்றும் அவரது பெற்றோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பாலியல் புகார் அளித்தனர்.

அந்த மனுவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவியிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, ஆசிரியர் மதிவாணன் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவி எழுப்பியுள்ள புகார் உண்மையில்லை என்றும், உள்நோக்கத்தோடு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், நேற்று முன்தினம் மாலை பள்ளி வேலை நேரம் முடிந்ததும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அவலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஆசிரியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட ஆசிரியர் மதிவாணனை நாமக்கல் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் குற்றச்சாட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே