ரஃபேல் போர் விமானத்திற்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங் அதில் பயணம் செய்தார்

பிரான்ஸ் நாட்டின் தசால்ட் நிறுவனத்திடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரனுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாரிஸ் நகரில் இருந்து 499 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மெரிக்நாக் நகருக்கு சென்ற அவர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் ரஃபேல் விமானத்தை தசால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராப்பியரிடம் முறைப்படி பெற்றுக்கொண்டார்.

விஜயதசமி, மற்றும் இந்திய விமானப்படை நாளில் முதல் ரஃபேல் விமானம் பெறப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது என்ற ராஜ்நாத்சிங், ரஃபேல் போர் விமானத்தால் இந்திய விமானப்படையின் வலிமை மேலும் அதிகரிக்கும் என்றார்.

ரஃபேல் விமானத்தில் ஓம் என எழுதி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னர் ரஃபேல் விமானத்தில் 30 நிமிடங்கள் ராஜ்நாத்சிங் பயணித்தார்.

தசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் சோதனை விமானிகள் பிரிவு தலைவர் பிலிப் டகாட்டு  விமானத்தை இயக்க அவருக்கு அருகில் உள்ள இருக்கையில் ராஜ்நாத் சிங் அமர்ந்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங் ரஃபேல் விமானப் பயணம் மிகவும் வசதியானதாகவும், சிறப்பானதாகவும் இருந்ததாகக் தெரிவித்தார்.

இதுபோன்ற அதிநவீன சூப்பர்சானிக் போர் விமானம் ஒன்றில் பறக்கக் கூடும் என்று தான் எண்ணிக்கூட பார்த்ததில்லை என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே