2வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி உயிரிழப்பு – கொடூர சித்தி கைது

6 வயது சிறுமியை இரண்டாவது மாடியிலிருந்து வீசி கொன்றதாக குழந்தையின் இரண்டாவது தாய் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் சக்கரபானி தெருவை சேர்ந்த பார்த்திபன் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.

இவருக்கு முதல் திருமணத்தில் ராகவி என்ற ஆறு வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சூர்யகலா என்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

சூரியகலாவிற்கும் பார்த்திபனுக்கும் இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. முதல் மனைவி மூலமாக பார்த்திபனுக்கு பிறந்த ராகவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அதே சமயம் சிறுமி ராகவி தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

நேற்று பாட்டி வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் ராகவி தனது சித்தியுடன் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் ராகவியை 2 மணி நேரமாக காணவில்லை என்றும் அவரை தேடி வருவதாகவும் தனது கணவருக்கு தகவலளித்துள்ளார்.

உடனே வீட்டிற்கு வந்த பார்த்திபன் அப்பகுதி முழுவதும் ராகவியை தேடியுள்ளார்.

அப்போது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து பார்த்தபோது வீட்டின் பின்புறம் ராகவி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி பார்த்திபன் அடைந்துள்ளார்.

அதன்பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். முதலில் சிறுமி மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால் மாடியில் இருந்து குழந்தை கீழே விழுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில் ராகவி மீது சூரியகலா வெறுப்பை வெளிப்படுத்தி வந்ததை அருகிலுள்ளவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சூரியகலாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

பார்த்திபன் மூலமாக சூரிய கலா 2வது முறையாக கருவுற்றதாகவும், ஆனால் ஏற்கனவே தனக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் 3வது குழந்தை வேண்டாம் என்று பார்த்திபன் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கருக்கலைப்பு செய்யுமாறும் பார்த்திபன் கூறியதாகவும் சொல்லப்பகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது கணவனின் முதல் மனைவியின் குழந்தையை கொன்றதாக போலீசாரிடம் சூரியகலா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணவனின் முதல் மனைவியின் குழந்தை என்பதால் சொந்த சித்தியே ஆறு வயது சிறுமியை அடித்து மாடியில் இருந்து வீசிய கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே