ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனில், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தையும், தாக்குதலை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவையும் ரஷ்யா பொருட்படுத்தவில்லை. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவின் தாக்குதலுக்கு அஞ்சி இதுவரை 30 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
ரஷ்யா போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், உக்ரைன் அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கியது முதல் தற்போது வரை 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.