ரபேல் விமானங்கள் வருகையால் இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம் – ராஜ்நாத் சிங்

2016ம் ஆண்டு பிரான்ஸில் உள்ள டசால்ட் நிறுவனத்திடம் 59,000 கோடி ரூபாய் மதிப்பில் 36 அதி நவீன ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் போட்டிருந்தது.

36 விமானங்கள் 2021ம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என பிரான்ஸ் உறுதியளித்தது.

முதல்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சின் போர்டியாக்ஸில் உள்ள மெரிக்னாக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டன. அவை 7,000 கி.மீ தூரம் பயணம் செய்து இந்தியாவுக்கு பயணமாகின.

இந்த போர் விமானங்கள் ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டது. அவை வந்தடைந்ததும் இந்திய விமானப்படையில் உடனடியாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ரஃபேல் விமானங்களில் இந்தியாவிற்கு புறப்பட்ட விமானப்படையின் விமானிகளை பிரான்சில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

இந்த 5 விமானங்களில் 3 விமானத்தில் ஒற்றை இருக்கையும் 2 விமானங்களில் இரண்டு இருக்கையும் உள்ளன. ரஃபேல் போர் விமானங்கள் ஏர் சுப்பீரியாரிட்டி என்ற வகையை சேர்ந்தது.

அதாவது, வானிலிருந்து தரை தாக்குதல்கள், வான் இலக்குகளை தாக்கும் என்பதுடன், எதிரி நாட்டு வான் பகுதியையும் கட்டுப்பாட்டில் எடுக்கும் திறன் வாய்ந்தவை.

அம்பாலா விமான தளம்:

இதனிடையே, நடுவானில் பிரான்ஸ் விமானத்தின் மூலம் ரஃபேல் போர் விமானங்களுக்கு தேவையான எரிபொருள் நிரப்பப்பட்டது.

ரஃபேல் விமானங்கள் அம்பாலா பகுதிக்குள் நுழைவதற்காக அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அம்பாலா விமான தளத்தை சுற்றியுள்ள 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக பயணித்த ரஃபேல் போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன.

இந்திய கடற்படை சார்பாக ரேடியோ சிக்னல் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு சுகோய் ரக போர் விமானங்கள் இதனை அணிவகுத்து அழைத்து வரும் காட்சிகள் வெளியாகின.

ரஃபேல் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டதாகவும், அம்பாலாவில் பாதுகாப்பாக தரையிறங்கி விட்டதாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசும் போது, ‘ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையின் திறன்களில் புரட்சியை ஏற்படுத்தும்.

கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலிலும், உரிய நேரத்தில் போர் விமானங்களை அனுப்பி வைத்த பிரான்சுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விமானம் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளது. இதன் ஆயுதங்கள், ரேடார் மற்றும் பிற சென்சார்கள் அதிக திறன் வாய்ந்தவை.

நம் நாட்டிற்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் எதிர்த்து போராட இந்திய விமானப் படைக்கு இந்த போர் விமானங்கள் வலு சேர்க்கும்’ என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே