புதுச்சேரியில் தற்போது பதவியில் இருக்கும் நாராயணசாமி அரசு பதவி ஏற்றது முதல் இப்போது வரை நடந்துள்ள நிகழ்வுகள் பின்வறுமாறு.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்றது.

அதே ஆண்டு மே 19ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

நாரயணசாமி அரசு பதவி ஏற்பதற்கு முன்னதாகவே, அதாவது 2016 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றார்.

2016ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி முதல் அமைச்சராக நாராயணசாமி பொறுப்பேற்றார்.

2017ஆம் ஆண்டுதான் கிரண்பேடியின் செயல்களுக்கு நாராயணசாமி வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தார். 

2017ஆம் ஆண்டு பாஜகவினர் மூன்று பேர் புதுச்சேரி சட்டமன்ற நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தும் பிரதமர் மோடியிடமும் கிரண்பேடி மீது நாராயணசாமி புகார் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு ஜூலையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் முதலமைச்சர், துணை நிலை ஆளுநரிடையே மோதல் வேண்டாம் என்றும்; அவரவர் அதிகாரங்களில் செயல்படுங்கள் என அறிவுறுத்தப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஏப்ரலில் முதலமைச்சர் – அமைச்சரவைக்குழுவின் ஆலோசகர் தான் ஆளுநர் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாராயணசாமிக்கும், கிரண்பேடிக்கும் இடையே மோதல் அதிகரித்தது.

கிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த 10ஆம் தேதி குடியரசுத்தலைவரை சந்தித்து கிரண்பேடி மீது நாராயணசாமி புகார் தெரிவித்தார். கடந்த 15ஆம் தேதி கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது.

கடந்த 16ஆம் தேதி தெலங்கானா ஆளுநர் தமிழிசை புதுச்சேரி வந்தார். கடந்த 17ஆம் தேதி புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தமிழிசை உத்தரவிட்டார்.

துணை நிலை ஆளுநரின் உத்தரவுப்படி இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குகோருகிறார் நாராயணசாமி.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே