நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு; 12 பேர் படுகாயம்

நெய்வேலி என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து 5 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தில் 7 அலகுகள் உள்ளன. இங்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் இன்று (ஜூலை 1) கொதிகலன் பிரிவில் 30 மீட்டர் உயரத்தில் நீராவிக் குழாய் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. அப்போது, அங்கு பணியிலிருந்த தொழிலாளர்கள் சுமார் 17 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த அனல்மின் நிலைய முதலுதவிக் குழுவினர் மற்றும் சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு, உடனடியாக என்எல்சி பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சிய 12 பேர், திருச்சி மற்றும் சென்னை தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்களைத் தேடும் பணி அனல்மின் நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் குறித்து அனல்மின் நிலைய அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே அனல்மின் நிலையத்தில் கடந்த மே 7-ம் தேதி 4-வது யூனிட்டில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 307 posts and counting. See all posts by Jiiva

Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே