விமான கட்டணத்திற்கு இணையாக தனியார் ஆம்னி பேருந்துகள் பண்டிகை காலங்களில் கட்டணம் வசூல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

விமான கட்டணத்திற்கு இணையாக தனியார் ஆம்னி பேருந்துகள் பண்டிகை காலங்களில் கட்டணம் வசூலிப்பது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

இதனை அறிந்து கொண்ட அந்த நிறுவனங்களும் ஆண்டுக்காண்டு கட்டணத்தை அதிகரித்து வருகின்றன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து 80 தனியார் பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் நிலையில் அவற்றிற்கான பல மடங்கு விலை வைத்து விற்கப்படுகிறது.

உதாரணமாக, சென்னையிலிருந்து கோவை செல்ல சாதாரண நாட்களில் தனியார் பேருந்துகளில் 900 முதல் 1,100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தீபாவளி சமயத்திலோ இந்த கட்டணம் 1700 லிருந்து 2400 வரை வசூலிக்கப்படுகிறது.

இதேபோல மதுரை செல்வதற்காக சாதாரண நாட்களில் 600 முதல் 900 ரூபாய் ஆக உள்ள கட்டணம், தீபாவளி சமயத்தில் 1500 முதல் 2200 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியை பொருத்தவரை ஏசி பேருந்து கட்டணம் 950 முதல் 1150 வரை சாதாரண நாட்களிலும், பண்டிகை காலத்தில் 2000 முதல் 2500 வரை வசூலிக்கப்படுகிறது.

இதே காலகட்டத்தில் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு குறைந்தபட்ச விமான கட்டணமே 2728 ரூபாய்தான், அதாவது கூடுதலாக 400 ரூபாய் செலவு செய்தால் விமானத்திலேயே சொந்த ஊர் சென்று விடலாம்.

ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை இன்றோ நேற்றோ நடப்பது இல்லை பல காலமாக இது தொடர்ந்து வருகிறது.

அரசு சார்பில் தீபாவளிக்காக 4600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவற்றுக்கான முன்பதிவு 23ஆம் தேதி தான் தொடங்குகிறது.

இதனால் அரசு பேருந்தில் இடம் கிடைக்குமோ இல்லையோ என்ற அச்சம் காரணமாக பெரும்பாலான மக்கள் தனியார் சேவையை நாட வேண்டிய நிலை இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க தனியார் பேருந்துகளில் பண்டிகைக் காலங்களில் ஓட்டுநர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பணியில் ஈடுபட வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் விரைந்து சென்றால் மட்டுமே சில மணி நேரங்கள் ஓய்வு கிடைக்கும் என்பதால் அதி வேகமாக வாகனங்களை ஓட்டி விதி மீறல்களும் ஈடுபடுகின்றனர்.

2018 ஆம் ஆண்டு மட்டும் 1448 தனியார் பேருந்துகள் மீது இதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக விதிமுறைகளை அரசு வகுப்பதும், அதனை தீவிரமாக கண்காணிப்பது மட்டுமே இந்த கட்டண கொள்ளை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே