இன்றுடன் சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைய உள்ளது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சி பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

குறிப்பாக, கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 160-வது எண் அரங்கில் கூட்டம் குவிந்து வருகிறது.

இந்த அரங்கில் பிடித்த புத்தகத்திற்கு ஈடாக பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக வேறு புத்தகத்தை கொடுக்கலாம் என்பதுதான் கூட்டம் குவிய காரணம்.

முகநூல் மூலம் இணைந்த வாசகர் வட்டத்தைக் கொண்டு LIT’S MEET என்ற புதிய அரங்கை சென்னையை சேர்ந்த மென்பொறியாளர் ஸ்ரீஜா அமைத்துள்ளார்.

புத்தக வாசிப்பில் அதிக ஆர்வமுடைய இவர், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் முகநூல் பக்கத்தில் ஒரு வாசகர் வட்டத்திற்கான LIT’S MEET என்ற பக்கத்தை உருவாக்கி உள்ளார்.

அதன் மூலம் வாசிப்பில் ஆர்வமுள்ள பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் மாதம்தோறும் இணைந்து நூல்கள் குறித்து உரையாற்றி வந்துள்ளனர்.

உங்களிடம் தேவை இல்லாத புத்தகங்கள் எத்தனை இருக்கிறதோ அதை கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக அங்கிருக்கும் புத்தகங்களை இலவசமாக எடுத்துக் கொள்வது என்பது இவர்களது புதிய முயற்சியாக இருக்கிறது.

இந்த விதமான அணுகுமுறை பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

புத்தகங்களை எடுக்க எந்த கட்டுப்பாடும் இல்லை; பணமும் செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்புடன் அரங்கில் 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைத்துள்ளனர்.

வாசகர்களை ஒருங்கிணைக்க தொடங்கிய முயற்சிக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறுகிறார் LIT’S MEET ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஜா.

அன்றாட அலுவலக வேலையை முடித்துவிட்டு புத்தக கண்காட்சியில் வேலை பார்த்து வரும், 15 பேர் கொண்ட குழுவினர், ஓர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளில் ஏராளமான வாசகர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே