அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. அடிக்கல் நாட்டு விழாவிற்காக இன்று காலை பிரதமர் மோடி அயோத்தி வந்தடைந்தார்.
டெல்லியில் இருந்து விமானத்தில் லக்னோ வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார். உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றார்.
பின்பு அனுமன் கர்கி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் குழந்தை ராமர் கோயிலில் வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து குழந்தை ராமரை தரையில் விழுந்து வணங்கிய அவர், கோயிலில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டார்.
அதன் பிறகு, வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை சடங்குகள் துவங்கின. பூமி பூஜை நிகழ்வில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்றனர். 40 கிலோ வெள்ளி செங்கலை நிறுவி, ராமர் கோவில் கட்டுமான பணிக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழாவிற்காக, 2,000 ஆலயங்களின் புனித மண் ம மற்றும் 100 நதிகளின் புனித நீர் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அயோத்தியில் மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக கோவில் அமையவுள்ளது. நகரா என்ற கோவில் கட்டிடக் கலை பாணியில் ராமர்கோவில் கட்டப்பட உள்ளது.
10 ஏக்கரில் கோயிலும், மீதமுள்ள 57 ஏக்கரில் கோயில் வளாகமும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 161 அடி உயரம், மூன்றடுக்கிறகு, 5 மண்டபங்கள், ஒரு கோபுரத்தை கொண்டதாக இந்த கோயில் வடிவமைக்கப்பட உள்ளது.
இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவுக்கு சாமியார்கள், விஐபி.க்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவை முன்னிட்டு, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.