உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான பதிவு நடைபெறும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்றிரவே மாடுபிடி வீரர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பதிவில், மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனையும் நடைபெற்று வருகிறது.
21 வயது முதல் 40 வயது வரையிலான மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க அனுமதி உண்டு எனவும், பதிவிற்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாடுபிடி வீரர்களுக்கு உயரத்திற்கு ஏற்ற உடல் எடையும், சீரான இதயத் துடிப்பும் இருக்க வேண்டும் எனவும்; உடலில் அறுவை சிகிச்சை செய்திருக்கவோ, காயங்களோ இருக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாடுபிடி வீரர்களுக்கான பதிவில் 30க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், வருவாய்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்தப் பதிவில் 1000 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.