ஆன்லைனில் மீன் வாங்கும் செயலியை அறிமுகப்படுத்திய மீன்வளத்துறை!

சென்னையில் மீன்களை ஆர்டர் செய்தால் வீட்டிற்கே கொண்டு வந்து தரும் வகையில் புதிய இணையதளம் மற்றும் செயலியை மீன்வளத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வீட்டில் இருந்து வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எளிதாக கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக வார இறுதி நாட்களில் இறைச்சிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால், பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகளில் செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் மீன்களை ஆன்லைன் அல்லது ஆப் வாயிலாக பொதுமக்கள் வாங்கிக்கொள்ளும் வகையில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்பினை முன்னிட்டு செயல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் www.meengal.com என்ற இணையதளத்தினை பல்வேறு கூடுதல் வசதிகளுடன் பொது மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தி, Meengal என்ற கைபேசி செயலி ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் மற்றும் செயலி வழியாக சென்னை மாநகரில் செயல்படும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் சாந்தோம், தேனாம்பேட்டை, அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் மீன் அங்காடிகளின் வழியாக அந்தந்த அங்காடிகளின் 5 கி. மீ. சுற்றளவில் உள்ள பொது மக்கள் பயன்பெறும் வகையில், தற்போதைய ஊரடங்கு காலத்தில் தினமும் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தரமான மீன்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று விநியோகம் செய்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இணைய சேவை மற்றும் செயலி மூலம் ஆர்டர் செய்ய முடியாதவர்கள் 044-24956896 என்ற தொலைபேசி எண்ணிற்கும் அழைத்து ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே