கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் காவல்துறையினர் பணியாற்றுகிறார்கள் – அண்ணாமலை

ஆடு திருடுபவர்களை பிடிக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் நேற்றிரவு ஆடு திருடும் கும்பலை பார்த்துள்ளார். இதையடுத்து அவர்களை விரட்டி சென்றதாக தெரிகிறது. காவலர் பூமிநாதன் பிடியில் சிக்காமல் திருச்சி மாவட்டத்தை கொள்ளையர்கள் கடந்துள்ளனர். இருப்பினும் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் தனது வாகனத்தில் அவர்களை விடாமல் துரத்தி சென்றுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி எனும் கிராமத்தில் சிக்கிய அக்கும்பல் எஸ்எஸ்ஐ பூமியைநாதனை கடுமையாகத் தாக்கியதோடு மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூர் போலீசார் பூமிநாதன் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது! கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் நம்முடைய காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள். பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. மாநில அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும்! அன்னாரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!” என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே