பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண் சுற்றுலா பயணியர் இந்தியாவுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் அமெரிக்க துாதரகம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கான பயண ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுற்றுலாத் தலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன.
எனவே அமெரிக்க சுற்றுலா பயணியர், குறிப்பாக பெண்கள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து பயணம் மேற்கொள்வதற்கான பயண எச்சரிக்கை குறியீட்டில், மிகவும் குறைவான ‘லெவல் 2’ இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு பெரும் சரிவையும் தலைக்குனிவையும் ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான மதிப்பைக் குறைத்து வருகிறது என்றும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே இந்தியாவில் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.