திருச்சியில் மாநாடு நடத்தினால் தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது திமுகவின் செண்டிமெண்ட். இதுவரையிலும் நடந்துள்ள 10 மாநில மாநாடுகளில் 5 மாநில மாநாடுகள் திருச்சியில்தான் நடந்துள்ளன.

அதன்படி, 11வது மாநில மாநாட்டினை திருச்சியில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஐபேக் டீம் – கே.என்.நேரு இடையேயான மோதலால் மாநாடு அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போயிருக்கிறது. இந்நேரம் நடந்து முடிந்திருக்க வேண்டியது.

ஐபேக் – கே.என்.நேரு இடையேயான ஈகோவினால் அறிவாலயம் வரைக்கும் பஞ்சாயத்து போயிருக்கிறது.

மாநாட்டு வேலைகளை கே.என்.நேரு கவனித்து வந்தபோது, ஐபேக் டீம் மூக்கை நுழைத்ததால் பிரச்சனை எழுந்தது. 

ஐபேக்கின் இளம் நிர்வாகிகள் சிலர், மாநாட்டு மேடையை அப்படி அமைக்க வேண்டும் இப்படி அமைக்க வேண்டும், பிளக்ஸ், பேனர்கள் அங்கே வைக்க வேண்டும் இங்கே வைக்க வேண்டும் என்று சொல்லச்சொல்ல நேருவுக்கு கோபம்.

டென்ஷன் ஆன நேரு, சகட்டுமேனிக்கு வார்த்தை அபிஷேகம் பண்ண, அரண்டு போன ஐபேக் டீம் அறிவாலயத்தில் பஞ்சாயத்தை கூட்டிவிட்டது.

பஞ்சாயத்தில் சுமூக எடுக்கப்பட்டு, மீண்டும் மாநாட்டு வேலைகளை பார்த்துவந்த வேளையில்தான், நேற்று தேர்தல் ஆணையம் தேர்தலைஅறிவித்து விட்டது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியினை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று ஒரேநாளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இதனால், அடுத்த மாதம் நடைபெற இருந்த திருச்சி மாநில மாநாட்டு மற்றும் பொதுக்குழுவினை ஒத்திவைத்திருக்கிறது திமுக.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் திமுக மூத்த நிர்வாகிகள்.

தேவையில்லாத ஈகோவினால் திமுகவின் செண்டிமெண்ட்டுக்கு ஆப்பு வைத்துவிட்டார்களே என்று விரக்தியில் இருக்கின்றனர் உ.பிக்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே