கிரண் பேடிக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை

24 மணி நேரத்தில் ஏனாமில் உள்ள 8 பேரை ஊருக்குள் அனுப்பாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பகுதி  ஆந்திரா மாநில காக்கிநாடா அருகே உள்ளது. இதுவரை அங்கு ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

காரணம் ஆந்திர – ஏனாம் எல்லைகள் கடந்த மார்ச் 22 ம் தேதியே மூடப்பட்டன.

இதனால் ஊருக்குள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் ஏனாம் பகுதியை சேர்ந்த 8 வாலிபர்கள் ஹைதராபாத், பூனே, புட்டப்பர்த்தி ஆகிய பகுதிகளில் கூலி வேலை செய்து விட்டு 26-ம் தேதி ஏனாம் திரும்பியுள்ளனர்.

இவர்களை போலீசார் இன்று வரை  ஊருக்குள் அனுமதிக்கவில்லை.

அங்கு எல்லையில் மழை – வெயிலில் வாடும் இவர்களை அனுமதித்து தனிமைப்படுத்த முதல்வர் உத்தரவிட்டும் மண்டல நிர்வாக அதிகாரி அனுமதிக்கவில்லை.

கொரோனா அச்சம் காரணமாக இவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கொரோனா காரணமாக ஒரு நாள் விடாமல் தினமும் 18 மணி நேரத்திற்கு மேலாக புதுச்சேரியில் பணியாற்றுகிறோம்.

ஏனாம் தொகுதி எம்எல்ஏவாக செயல்படாமல் 30 தொகுதி எம்எல்ஏ.வாக செயல்படுகிறேன். ஆனால் பிச்சை எடுத்து பதவியை பெற்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடி துவக்கம் முதல் தொந்தரவு செய்கிறார்.

ரேஷன் கடைகளுக்கு 2000 ரூ முழுமையாக வழங்க முடியவில்லை. அரிசி இன்னும் மக்களுக்கு வழங்கவில்லை. பேக்கிங் தேவையில்லை.

காரணாம் அவர் அதிகாரிகளை மிரட்டுகிறார் என்றார்.

மேலும் கிரண்பேடி சொல்வதை அதிகாரிகள் செய்கிறார்கள் என்றும் தேர்ந்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

நிவாரண பணியில் கிரண்பேடி தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்.

ஏப்ரல் 10 ம் தேதிக்கு மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க முதல்வர் கையெழுத்திட்டு கோப்பு அனுப்பினால் கிரண்பேடி வேண்டுமென காலம் தாழ்த்தி அனுப்பினார்.

இதனால் சிவப்பு அட்டைக்கு இன்னும் முழுமையாக அரிசி கொடுக்கவில்லை.

மஞ்சள் அட்டைக்கு எப்படி கொடுப்பாங்க…?அரிசியை பேக்கிங் செய்து போக்குவரத்து செலவுக்கு 7 கோடி ரூபாய் வீண் செலவு செய்வதாக கூறுகிறார்.

மக்கள் பணம் ஒரு  ரூபாய் கூட வீணடிக்க மாட்டேன் என கூறிய கிரண்பேடி அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க கூடாது என மக்கள் பணத்தை வீணடித்து விட்டார் என்றும் சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம்சாட்டினார்.

ஏனாமை சேர்ந்த 8 தொழிலாளர்கள் ஹைதராபாத், ஒரிசா, புட்டபர்த்தி ஆகிய பகுதியில் இருந்து நடைபயணமாக 26 ம் தேதி ஏனாம் எல்லைக்கு வந்தனர்.

வெயில்-மழையில் அவதி படும் இவர்களை ஏனாமிற்குள் செல்ல கிரண்பேடி அனுமதிக்கவில்லை.

4 நாட்களாக நடந்து வந்த சொந்த மண் மக்களை விரட்டுவது நியாயமா…? என கேள்வி எழுப்பிய மல்லாடி, என் மீது உள்ள கோபத்தால் மக்களை கிரண்பேடி  பழிவாங்குகிறார் என்றார்.

மேலும் 24 மணி நேரத்தில் ஏனாமில் 8 பேரை ஊருக்குள் அனுப்பாவிட்டால் அமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே