பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டதை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்..!!

திண்டுக்கல், ரெட்டியார் சத்திரத்தில் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசிய நபர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் விதத்தில் தலைவர்கள் சிலைகளைத் தார் பூசி அழிப்பது, சேதப்படுத்துவது, காவிச்சாயம் பூசுவது, காவித்துண்டு போர்த்துவது போன்ற செயல்களில் சிலர் சமீபகாலமாக ஈடுபடுகின்றனர்.

இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது என முதல்வரும், துணை முதல்வரும் கண்டித்திருந்தனர்.

இவ்வாறு செய்தவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் நேற்றிரவு பெரியார் சிலைக்கு சிலர் காவிச் சாயம் பூசியுள்ளனர். உடனடியாக அங்கு வந்த பொதுமக்கள், திமுக தொண்டர்கள் சிலையை அவமதித்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தினர்.

திமுக எம்எல்ஏ செந்திலும் அங்கு வந்து பார்வையிட்டார். சிலையின் மீதுள்ள காவிச்சாயம் அகற்றப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

‘திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டிருப்பது கோழைத்தனமான செயலாகும். இச்செயலைச் செய்தவர்கள் தாங்கள் கோழைகள் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் கொள்கைகளைக் கொள்கைகளால் எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாதவர்கள்தான் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதன் பின்னணியில் உள்ள நச்சுக்கிருமிகள் அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.

திருச்சி இனாம்புலியூரில் கடந்த மாதம் இதே நாளில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கும், இன்றைய நிகழ்வுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும். இரு குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே