புனேயில் ரூ.2.35 லட்சம் மதிப்புள்ள 58 வெங்காய மூடைகளை திருடிச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ஒரு கிலோ வெங்காயம் ரூ.75க்கு மேல் அதிகரித்துள்ளது. அதிகளவு மழை, பதுக்கல் காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெங்காயம் விலையை கண்டு கண்ணீர் வடிக்கும் குடும்ப பெண்கள், எப்போது குறையும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தங்கம் விலையேற்றத்திற்கு இணையாக வெங்காயத்தை ஒப்பிடும் அளவிற்கு விலையேற்றம் இருப்பதால், பல இடங்களில் திருட்டும் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் 58 வெங்காய மூடைகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனேயில் கடந்த 21ம் தேதி, விவசாயி ஒருவரிடம் 4 பேர் கொண்ட திருட்டுக் குழு, ரூ.2.35 லட்சம் மதிப்பிலான 58 வெங்காய மூடைகளை திருடியுள்ளது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வெங்காயத்தை திருடி சென்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 49 மூடைகள் கைப்பற்றப்பட்டதாகவும், மீதமுள்ள மூடைகள் ஏற்கனவே திருடர்கள் விற்றுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே