சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் நடனமாடி விழிப்புணர்வு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கொரோனோ வைரஸ் பாதுகாப்பு குறித்து ரயில்வே காவல்துறையினர் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி, உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. மேலும் மக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே வெளியே அனுப்பப்படுகின்றனர்.

ரயில் நிலையங்களில் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு தரப்பினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் குறித்த பாடலுக்கு ரயில்வே போலீசார், நடனமாடி மக்கள் வைரசில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், கைகளை கழுவும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பயனாளிகளுக்கு கொரோனோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாகவும்; யாருக்கேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறை மூலம் தனிமைப் படுத்தப் படுவதாக குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே