தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்… உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவிற்குள் புகுந்து தாக்குதல் நடத்த 320-க்கும் அதிகமான பாகிஸ்தான் தீவிரவாதிகள், எல்லையில் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் சுதந்திர தினம், ஈகைத்திருநாள், ரக்சா பந்தன் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகள் விரைவில் அடுத்தடுத்து கொண்டாடப்பட உள்ளன.

இந்த சூழலில், ஜம்மு – காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவில் ஊடுருவுவதற்கு 320-க்கும் அதிகமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், இதற்காக எல்லையில் 27 சிறப்பு தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

எல்லைப் பகுதியில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை ரா பிரிவு உளவுத்துறையினர் இடைமறித்துக் கேட்டதன் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, உரி, குப்வாரா, பந்திபோரா, சம்பா உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில், தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ளதை முன்னிட்டும் தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ஊடுருவல்களை தவிர்க்க இந்திய ராணுவத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே