பொங்கல் பண்டிகை பொருட்களை வாங்க சந்தைகளில் குவியும் மக்கள்

தமிழகத்தில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விற்பனை களைக்கட்டியுள்ளது.

தஞ்சையில் உள்ள காமராஜர் மார்க்கெட் மற்றும் கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் பொங்கலுக்கு தேவையான கரும்பு, இஞ்சி மற்றும் மஞ்சள் கட்டுகள், காய்கறிகள் மற்றும் பூக்களின் விற்பனை களைக்கட்டியுள்ளது.

25 கழிகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு 250 ரூபாய்க்கும், இஞ்சி மற்றும் மஞ்சள் கட்டு 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற சிறப்பு வார சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்தை, பொங்கல் பண்டிகையை ஒட்டி இரண்டு நாட்களுக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

இதில் ஒரு ஜோடி ஆடு ஆறாயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்கப்பட்டதாகவும், ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி ஆகியவற்றின் விற்பனையும் சூடுப்பிடித்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி கிராமத்தில் நடைபெற்ற கோழி சந்தையில் 3 லட்சம் ரூபாய்க்கு நாட்டுக்கோழிகள் மற்றும் சண்டை சேவல்கள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிழமை நடைபெற்ற சந்தையில் செம்புளிச்சாம் பாளையம், வரப்பள்ளம், சவண்டப்பூர், குப்பாண்ட பாளையம், கீழ்வாணி, மேவாணி ஆகிய பகுதிகளில் இருந்து நாட்டு கோழிகளும், சேவல்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

வழக்கமாக ஒருகிலோ எடைக்கொண்ட நாட்டுக்கோழி 350 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் பொங்கலை ஒட்டி 500ரூபாய்க்கு விலை போனது.

அதேபோன்று சண்டை சேவல்களான வல்லூறு, செங்கருப்பு, மயில், கீரி, ஆந்தை,பேடு ஆகியவை நிறம் மற்றும் அதன் உயரத்தை பொறுத்து ஒரு சேவல் ஆறாயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பொங்கலை முன்னிட்டு காப்பு கட்டுவதற்கு தேவையான பூளை மற்றும் ஆவாரம் பூக்களின் விற்பனை களைக் கட்டியது. 

போகி பண்டிகையை ஒட்டி வீட்டின் தாழ்வாரங்களில் வேப்பிலை, ஆவாரம், துளசி மற்றும் பூளைப்பூக்களை வைத்து காப்பு கட்டுவது வழக்கம்.

அதற்காக சத்தியமங்கலத்தில் உள்ள தினசரி சந்தைக்கும், செவ்வாய் கிழமையை ஒட்டி நடைபெறும் வாரச்சந்தைக்கும் வந்த மக்கள் பூளை மற்றும் ஆவாரம் பூக்களை அதிகளவில் வாங்கி சென்றனர்.

அதேபோல் சங்கராந்தி பூஜைக்கு தேவையான பூசணிக்காய், கரும்பு உள்ளிட்டவைகளின் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. 

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் கூட்டம் அலை மோதியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள உழவர் சந்தைக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் நேரடியாக காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

கிழங்கு வகைகள், பச்சை காய்கறிகள், கரும்பு, மஞ்சள், பூக்கள் மற்றும் மண் பானைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களில் 300 டன் காய்கறிகள் விற்பனையாகி உள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

சேலத்தில் உள்ள கடை வீதிகளில் பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விற்பனை களைக்கட்டியுள்ளது. 

தாதகாப்பட்டி, சூரமங்கலம், வ.உ.சி. மார்க்கெட், குரங்குசாவடி உள்ளிட்ட பகுதிகளில் பானை, கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை வாங்க மக்கள் குவிந்தனர்.

இங்குள்ள கடைகளில் கணிசமாக விலை உயர்த்தப்பட்டு ஒரு மண்பானை 200 ரூபாய்க்கும், ஒரு ஜோடி செங்கரும்பு 100 ரூபாய்க்கும், ஒரு ஜோடி மஞ்சள் கொத்து 100 ரூபாய்க்கும், வாழைத்தார் 500 ரூபாய்க்கும், பூக்கள் முழம் கணக்கில் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் விற்பனையாகின. 

பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தைக்கு காய்கறிகள் மற்றும் பூக்கள் வாங்க வந்த மக்கள் விலை அதிகரிப்பால் அதிருப்தி அடைந்தனர்.

உசிலம்பட்டி பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகை  4 ஆயிரம் ரூபாய்க்கும், கனகாம்பரம் ஆயிரத்து 300 ரூபாய்க்கும், காக்கட்டான் ஆயிரம் ரூபாய்க்கும், துளசி கட்டு 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்று, காய்கறி சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 160 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 150 ரூபாய்க்கும், தக்காளி 30 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 80 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 70 ரூபாய்க்கும் விற்பனையானதால் சந்தைக்கு வந்த மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

5 கிலோ எடைக் கொண்ட ஒரு பூசணிக்காய் 200 ரூபாய்க்கும், 12கழிகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு 450 ரூபாய்க்கும் விற்பனையானது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே