போகி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

இந்திரன் முதலியோரை வணங்கி திருப்தி செய்யும் நாள், போகியாக கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் போகிப் பண்டிகையை வீடுகள்தோறும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது.

இதையொட்டி, தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. பயனற்ற பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை வரவேற்றனர்.

இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் விடிந்தபிறகும் புகைமூட்டமாக காணப்பட்டது.

எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் மெதுவாகவே இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை ஓட்டிச் சென்றனர்.

புகை மற்றும் பனிமூட்டத்தால் சாலைகளில் நடந்து சென்றவர்கள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை திருவொற்றியூரில் போகி பண்டிகையை சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் மற்றும் திருவொற்றியூர் கவரை தெரு உள்ளிட்ட இடங்களில் பயனற்ற பொருட்களை தீ வைத்து எரித்தனர். அப்போது சிறுவர்கள் மேளம் அடித்தபடி தெருக்களில் வலம் வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் போகி பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.

விடிந்த பின்னரும் அப்பகுதியில் பனி மூட்டமும், புகை மூட்டமுமாக காணப்பட்டது.

புதுச்சேரியில் திருபுவனை, வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பழைய பொருட்களை எரித்து போகிப் பண்டிகையை வரவேற்றனர்.

போகி பண்டிகைக்காக காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ட்யூப், ரசாயனம் கலந்த பொருட்களை எரிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

போகி நாளான இன்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட காவல்துறை உதவியுடன் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்று தரத்தினை கண்காணிக்க, 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரின் பல்வேறு இடங்களில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் எரிக்கப்பட்டதால் சென்னை திருவொற்றியூர் – எண்ணூர் விரைவுச் சாலை, மணலி விரைவுச் சாலைகளில் கடுமையான பனி மூட்டத்துடன் புகை மூட்டமும் சூழ்ந்தது.

இதனால் சாலைகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஒட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டாரங்களில் பனிப்பொழிவு இன்று காலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

அத்துடன் போகிப் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட புகை மண்டலமும் சேர்ந்து கொண்டதால் சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

சென்னை மெரினா கடற்கரை, கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் பனிமூட்டத்தை மிஞ்சும் அளவுக்கு புகை மூட்டம் காணப்பட்டதால் காற்று மாசு ஏற்பட்டது.

புகை காரணமாக அவதியுற்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே