ஆன்லைன் உணவு டெலிவரி செய்வதற்கான நேரத்தை அதிகரிக்க கோரிக்கை

கொரோனா எதிரொலியாக குறைக்கப்பட்டுள்ள ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நேரத்தை அதிகப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோ‌னா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் Swiggy, Zomato போன்ற ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

  • காலை 7 மணி முதல் 9 மணி வரையும்,
  • மதியம் 12 மணி முதல் 2.30மணி வரையும்,
  • இரவு 7 மணி முதல் 9மணி வரை மட்டுமே உணவு டெலிவரிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டால், உணவு டெலிவரி செய்வதை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியுள்ளவர்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

காவல்துறையிடம் இருந்து அடையாள அட்டை பெற வேண்டும், வாடிக்கையாளர்களிடம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே உணவு டெலிவரி செய்வதாகவும் அந்த பணியிலிருப்பவர்கள் கூறுகின்றனர்.

வீட்டு வாடகை, உணவு செலவுக்குக் கூட வழியின்றி தவிக்கும் தங்களை போன்ற பணி பாதுகாப்பற்றவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தங்கள் வாழ்வாதாரத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என உணவு டெலிவரி செய்யும் பணியிலுள்ள‌ர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே