கடலூரில், சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இணைந்து திறந்துவைத்தனர்.
ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் அவரது உருவப்படத்தையும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் திறந்துவைத்தார்.
இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனருகே அவரின் வெண்கலச் சிலையும், நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இணைந்து திறந்துவைத்தனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, வாழும் போது வரலாறாக வாழ்ந்தவர் ராமசாமி படையாட்சியார் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் எனவும் புகழாரம் சூட்டினார்.
கடலூரில் இருப்புப் பாதை மற்றும் மருத்துவமனை அமைக்க தமது நிலத்தை வழங்கியவர் ராமசாமி படையாட்சியார் என்றும் முதலமைச்சர் கூறினார்.
வாக்குறுதி அளித்து அதை உடனடியாக நிறைவேற்றும் ஆட்சி அதிமுக ஆட்சி என்றும், ஜெயலலிதா வழியில் சொன்னதை தான் செய்வோம், செய்வதை தான் சொல்வோம் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
விழாவில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி. சம்பத், கே.சி. வீரமணி, துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
ராமசாமி படையாச்சியாரின் மகன் ராமதாஸ் விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.