ட்விட்டரில் காங்கிரஸ்காரன் என்ற அடையாளத்தை நீக்கிய ஜோதிராதித்ய சிந்தியா!

தன்னுடைய காங்கிரஸ் அடையாளத்தை ட்விட்டரிலிருந்து நீக்கியுள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா.

மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்து வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது. 

புகழ்பெற்ற குவாலியர் அரசவம்சத்தை சேர்ந்தவரான காங்கிரஸ் மூத்த தலைவர், ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சராகவும், எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார்.

இவரின் தந்தை மாதவராவ் சிந்தியாவும் காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

கடந்த பாராளுமன்ற தேர்தல் நேரத்திலிருந்தே, தனக்கு கட்சிக்குள் போதிய அங்கீகாரம் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார் ஜோதிராதித்ய சிந்தியா.

உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த சிந்தியா, தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியதையடுத்து அகில இந்திய தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி, ராஜினாமா செய்த நிலையில் தானும் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் கருத்துக்களை பகிரும் ட்விட்டரிலிருந்து காங்கிரஸ்காரன் என்ற அடையாளத்தை ஜோதிராதித்ய சிந்தியா நீக்கியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

“PUBLIC SERVANT & CRICKET ENTHUSIAST” என இரண்டை மட்டுமே அவர் ட்விட்டரில் அடையாளப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜோதிராத்ய சிந்தியா கூறுகையில், இதனை எதற்காக பெரிதுபடுத்துகிறீர்கள்? எனது ட்விட்டர் பயோ மிகவும் பெரிதாக இருந்ததால் அதனை குறைத்து சில பகுதிகளை நீக்கியுள்ளேன் என விளக்கமளித்துள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த போது மத்திய அரசின் முடிவை வரவேற்றது, மத்தியபிரதேசத்தில் உள்ள கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நேரடியாக விமர்சனங்களை வைத்தது போன்றவை காங்கிரஸ் மீது ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியில் இருப்பதை காட்டிய நிலையில் தற்போது இந்த விவகாரமும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே