தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அறந்தாங்கியில் கடைசி நாளில் மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் ஏராளமானோர் வேட்புமனுத்தாக்கல் செய்ய குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆரணியில் திமுக கூட்டணியில் போதிய இடம் கிடைக்காததாக கூறி, திமுகவிற்கு எதிராக 14 இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உடன்படிக்கை ஏற்படாததால், கவுன்சிலர் பதவிக்கு திமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
ஆரணியில் 11வது வார்டு தங்களுக்கு ஒதுக்கப்படாததால் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி தனித்துப் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளது.
கரூர் வெண்ணெய்மலையில், அதிமுகவினர் தங்கள் வாகனங்கள் மீது பட்டாசுகளை கொளுத்திபோட்டதாக திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக கூட்டணி கட்சியினர் எம்ஜிஆர் வேடமணிந்தவருடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, திமுகவை போல தாங்கள் கார்பரேட்டுகளை நம்பாமல், மக்களை நம்புவதாகவும், கார்பரேட்டுகள் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்காது எனவும் கூறினார்.
விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களுடன், அவர்களது ஆதரவாளர்கள் வேன்களில் சாரை சாரையாக வந்தனர்.
நீலகிரி மாவட்டம் உல்லத்தி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தோடர் இனத்தைச் சேர்ந்த பிரசாத் வேட்புமனுத்தாக்கல் செய்தார். பாரம்பரிய உடைகளுடன் வந்த அவரது ஆதரவாளர்கள், முழக்கங்கள் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாமதமாக வந்து தங்களுக்கு முன் அதிமுகவினர் வேட்புமனுத்தாக்கல் செய்ததாக கூறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போட்டியிடுவதற்காக கடைசி நாளில் அரசியல் கட்சியினரும், சுயேட்சைகளும் ஆர்வமுடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்போது, முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் தகுதி இல்லாத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
19-ந்தேதி வரை மனுக்களைப் பெற அவகாசம் அளிக்கப்பட்டு, அதே நாளில் மாலை வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
அப்போது ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் ஒவ்வொரு கட்சி சார்பிலும் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்று தெளிவாக தெரிந்துவிடும்.