திமுக தேர்தல் அறிக்கையை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

திமுக தேர்தல் அறிக்கையை அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வைத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசீர்வாதம் பெற்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக ஆகிய இரு முதன்மைக் கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை நேற்று முன்தினம் இரவு முடித்த திமுக, அக்கட்சி போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று (மார்ச் 12) வெளியிட்டது.

இந்நிலையில், இன்று (மார்ச் 13) நண்பகல் 12 மணிக்கு திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என திமுக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கொண்ட குழு தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது.

இதில், மிகப்பெரிய இலவச அறிவிப்பும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர கல்வி, பெண்கள் முன்னேற்றம், வேளாண் துறை, மருத்துவப் படிப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும்.

இதனுடன் முக்கிய அறிவிப்பாக இலவசங்கள் பற்றிய விவரம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையை சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வைத்து ஆசீர்வாதம் பெற்றார். அங்கு, மலர் தூவி மரியாதையும் செலுத்தினார்.

அப்போது, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

இதையடுத்து, அண்ணா அறிவாலயம் செல்லும் மு.க.ஸ்டாலின், அங்கு தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே