ஜாமியா பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக குற்றப்பின்னணி கொண்ட 10 பேர் கைது…!

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக குற்றப்பின்னணி கொண்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டன. 

வன்முறையை கட்டுப்படுத்த பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர்.

மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி குறித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக குற்றப்பின்னணி கொண்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், வன்முறை தொடர்பாக மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே