பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சிலை திறப்பு

மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் 65-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.

இதற்காக நேற்று இரவு மதுரை வந்த கமல்ஹாசன் இன்று காலை 9 மணிக்கு காரில் பரமக்குடிக்கு புறப்பட்டார்.

வழிநெடுக அவரது ரசிகர்கள் திரண்டு வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

காலை 10.30 மணிக்கு பரமக்குடிக்கு வந்த கமல்ஹாசனை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள், பொதுமக்கள் வரவேற்றனர்.

பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கமல்ஹாசனுக்கு சொந்தமான இடத்தில் அவரது தந்தை வக்கீல் சீனிவாசனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை கமல் ஹாசன், அவரது சகோதரர் சாருஹாசன் மற்றும் குடும்பத்தினர் திறந்து வைத்தனர்.

இதையடுத்து மக்கள் நீதிமய்யம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

தெளிச்சாத்தநல்லூரில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மையத்தையும் திறந்து வைத்தார்.

பரமக்குடி கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்க கட்டிடத்தில் தனது தந்தையின் உருவப்படத்தையும் அவர் திறந்து வைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே