ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் வெற்றிகரமாக நிறைவேறியது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம், 11 பேர் உயிரைப் பறித்துள்ள நிலையில் – அது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டு – அது தொடர்பாக முடிவு எடுக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று எடப்பாடி அ.தி.மு.க. அரசு கேட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இது தொடர்பாக வழக்குகள் ஏற்கனவே தொடரப்பட்டு – ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கடந்த ஜூலை மாதமே அ.தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க. அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது எங்களுக்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் கொடுங்கள் எனக் கேட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என திமுக தைலவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து வருவதாகவும்; இது இளைஞர்களின் நேரத்தை விரயம் செய்வதோடு அவர்களை தற்கொலை செய்யவும் தூண்டுவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அவசர சட்டம் மூலம் தடை செய்யப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் இன்று அதற்கான மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை என்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் சுமார் 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும்; ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என கடந்த ஜூலை மாதமே அ.தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே