கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் மே 17 வரை உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஊரடங்கு உத்தரவை மே 17 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பதை அடுத்து, உள்ளூர் பயணிகள் விமான சேவை மே 17 நள்ளிரவு 11.59 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி பிறப்பித்த உத்தரவுகளை அனைத்தும் மே 17 நள்ளிரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

எனவே, அதுவரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும், இந்த உத்தரவு சர்வதேச கார்கோ விமானச் சேவைக்கும், சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானச் சேவைக்கும் பொருந்தாது.

அடுத்து உள்ளூர் மற்றும் சர்வதேச விமானச் சேவை தொடங்கும் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உள்நாட்டு மற்றும் சா்வதேச விமான சேவைகள் மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தன.

பிறகு ஊரடங்கு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை அடுத்து, விமான சேவையும் மே 3 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மே 17 வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே