2500 ரூபாய்க்கான டோக்கனை அதிமுகவினர் மூலமாக விநியோகிப்பதை எதிர்த்து திமுக மனு தாக்கல்..!!

பொங்கல் பரிசு ரூ.2,500 -ஐ அதிமுகவினர் மூலம் விநியோகிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

வரும் 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால், பொங்கல் பரிசுக்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகம் செய்யாமல், அதிமுகவினர் விநியோகம் செய்து வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், பொங்கல் பரிசுக்கான டோக்கனை அதிமுகவினர் கொடுக்கக்கூடாது என்றும், அரசு ஊழியர்களை கொண்டு பொங்கல் பரிசு டோக்கனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், பொங்கல் பரிசு ரூ. 2500 டோக்கன்களை அதிமுகவினர் விநியோகிப்பதை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ரூ.2,500 பொங்கல் பரிசுக்கான டோக்கனை அதிமுகவினர் வழங்கி வருகின்றனர். இது சட்டப்படி தவறு. அதிமுகவினர் டோக்கன் வழங்குவதால் உண்மையான பொது மக்களுக்கு பரிசுத் தொகை கிடைக்காது.

எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்றும்; அதில் அதிமுக தலைவர்கள் படங்களை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே