உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு தருவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் நல்ல மன்னார் கோட்டை பகுதியை சேர்ந்த வேட்பாளர் சுப்புலட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களையும், ஆயிரம் ரூபாய் நியாய விலைக் கடைகளில் வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை சாக்காக வைத்துக் கொண்டு அவர்கள் இலவச பொருட்களுக்கு டோக்கன் கொடுக்கும் பொழுது எங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்று என்ற உறுதிமொழியை வாங்க அவர்கள் முயற்சி செய்வதால் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வாக்களிக்க முடியாமல் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த அண்ணா திமுக வேட்பாளர்களுக்கு பொது மக்கள் வாக்களிக்கும் சூழ்நிலை உள்ளது. இது தேர்தல் சட்டவிதி முறைகளுக்கு புறம்பானது.
ஆகையால், தேர்தலுக்குப் பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் கிராமப்புற பகுதிகளுக்கு பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என்று
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நீதிமன்றத்தில் கூறினார்.
அதே நேரத்தில் தேர்தல் நடத்தாத மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
நகர் புறங்களில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து, மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன் கூறினார்.