மதுரை ரேஷன் கடையில் தரமற்ற அரிசி – அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு

மதுரையில் மோட்டார் சைக்கிளில் சென்று நியாயவிலைக் கடையை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை பெத்தானியபுரத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ நலத்திட்ட உதவிகளை திங்கள்கிழமை வழங்கிக் கொண்டிருந்தார்.

மதுரை பெத்தானியாபுரம் பாண்டியராஜபுரப் ரேஷன் கடை எண் 006-ல் ரேஷன் அரிசி சரியில்லை மற்றும் எடை குறைவாக உள்ளது எனவும் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் புகார் தெரிவித்தார். 

தனது குடும்பத்தில் ஐந்து நபர்கள் இருப்பதாகவும் ரேஷன் கடையில் ஒன்பது கிலோ மட்டுமே அரிசி வழங்கியுள்ளதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்தார்.

மேலும் கடை ஊழியர்களிடம் இதுபற்றி கேட்டதற்கு சரியாக பதில் சொல்லாமல் விரட்டி அனுப்பி விட்டதாகவும் கூறினார்.

மேலும் அரிசி இப்படித்தான் இருக்கும் எனவும் வேண்டுமென்றால் வாங்குங்கள் இல்லையென்றால் செல்லுங்கள் என விற்பனையாளர் மக்களை உதாசினப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து கடை விவரத்தை அந்த பெண்ணிடம் விசாரித்த அமைச்சர் அங்கிருந்த கட்சி நிர்வாகி ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சம்பந்த கடைக்கு நேரடியாகச் சென்றார். 

கடைக்குள் பொருள்களை வழங்கிக் கொண்டிருந்த நபரை யார் என்று விசாரித்தபோது அவர் கடைக்குத் தொடர்பு இல்லாதவர் என்பது தெரியவந்தது.

அதையடுத்து உடனடியாக அவரை கைது செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.

நியாய விலை கடையில் பயன்படுத்தப்பட்ட விற்பனை முனைய கருவியில் ஆய்வு செய்தபோது 20 கிலோ அரிசி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் 9.5 கிலோ மட்டுமே பெண்ணுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

அதையடுத்து அந்த எடையாளரை பணியிடை நீக்கம் செய்ய கூட்டுறவுத் துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி எனப் காவல்துறை கூறினர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே