JUST IN : பிரக்யாதாகூருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சரவையில் பொறுப்பு

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டு பின்னணி கொண்ட பிரக்யாதாகூருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சரவையில் பொறுப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான பாதுகாப்புத்துறை அமைச்சரவையில் 21 உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவிற்கு பிரக்யா தாகூரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு மாலேகானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த பிரக்யா தாகூர், தற்போது பிணையில் இருக்கிறார்.

உடல்நிலையை காரணம் காட்டி பிணையில் வெளியே வந்த பிரக்யா தாகூர் இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார்.

இவர்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுத மற்றும் வெடிக்கும் பொருட்கள் சட்டம் ஆகியவற்றின் மீதான வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் பாதுகாப்புத் துறையில் பிரக்யா தாகூர் இடம்பெறுவதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இந்திய பாதுகாப்புத்துறையை அவமதிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது இந்திய பாதுகாப்புத் துறை, பாதுகாப்புத்துறை வீரர்கள், மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய குடிமக்களை அவமதிக்கும் செயல் இது என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரக்யா தாகூரை பாதுகாப்புத் துறைக்கு பரிந்துரைத்திருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல; பாஜக தனது பரிந்துரையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும், எல்லாம் அரசியலமைப்பால் வழிநடத்தப்படவில்லை என்றாலும் சில முடிவுகள் தார்மீக அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ்கட்சியின் செயலாளர் ப்ரணவ் ஜா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங்கை 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே