செல்ஃபி மோகத்தில் உயிரை விட்ட புதுமணப் பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணியில் செல்பி எடுக்கும்போது திருமணமாகி 15 நாட்களே ஆன புதுமணப்பெண் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவின் மகள்கள் கனிமொழி, கனிதா, சினேகா ஆகியோர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வந்தனர்.

மகன் சந்தோஷ் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்கள் நான்கு பேரும் உறவினரான புதுமணத்தம்பதி பிரபு, நிவேதா, யுவராணி ஆகியோருடன் ஊத்தங்கரையில் சினிமா பார்த்துவிட்டு பாம்பாறு அணையை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர்.

அணையில் அதிக அளவில் தண்ணீர் செல்வதை கண்ட அவர்கள் தண்ணீரில் இறங்கி நின்றபடி செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.

கனிதா, சினேகா, சந்தோஷ், புதுமணப்பெண் நிவேதா மற்றும் யுவராணி ஆகியோர் தண்ணீரில் நின்று கொண்டிருக்க, பிரபு தண்ணீரை ஒட்டியவாறு கரையில் நின்றபடி தனது செல்போன் மூலம் செல்ஃபி எடுத்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கனிதா உள்ளிட்ட ஐந்து பேரும், திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடினர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரபு கூச்சலிட்டபடி, யுவராணியை மட்டும் மீட்டு கரை சேர்த்தார். அதற்குள் மற்ற 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதை கண்டு பிரபுவும், யுவராணியும் கதறி அழுதனர்.

தகவலறிந்து ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கனிதா, சினேகா, சந்தோஷ், நிவேதா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

புதுமணப்பெண், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டப்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே