கர்நாடகாவின் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை கட்டுவது பற்றி தமிழகத்துடன் பேச வேண்டியது இல்லை என்று கர்நாடக அரசு கூறியிருப்பது தன்னிச்சையானது, நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியது என்று கூறியுள்ளார்.

மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் உரிமைகளை எதேச்சியதிகாரமாக அத்துமீறி அபகரிக்க முயல்வதாகும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்தியில் உள்ள பாஜக அரசு பாணியில், சகோதர மாநிலமான தமிழகத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் வகையில் கர்நாடக அரசு எடுக்கும் இந்த நிலைப்பாடு கூட்டாட்சியில் வரவேற்கத்தக்க ஒன்று அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முன் அனுமதி இன்றி மத்திய சுற்றுச்சூழல் துறை எந்த புதிய அணை திட்டத்திற்கும் கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கவே முடியாது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பல வகையிலும் சோதனைகளை சந்தித்து வரும் தமிழக விவசாயிகளின் நலனை இந்த முயற்சி மேலும் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கக் கூடாது என்றும், இந்த திட்டத்திற்கு அனுமதி கூறி மீண்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கர்நாடக அரசின் விளக்க அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே