மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குரு நானக் ஜெயந்தியான இன்று பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தங்கள் அரசு விவசாயிகளுக்காக பாடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நிலையில் அந்த மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என அறிவித்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து டெல்லியில் கடந்த ஒரு வருடமாக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். போராட்டத்தை முடித்துக் கொண்டு விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்பாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற இருப்பதால் அதில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக அமளி ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அதே போல், அடுத்த ஆண்டு பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் வேளாண் சட்டம் தொடர்பான தாக்கம் எதிரொலிக்கும் என்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை வரும் குளிர்கால கூட்டத் தொடரில் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே