நெல்லை பள்ளி விபத்து தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் செல்வகுமார், கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி தலைமையாசிரியை ஞான செல்வி நெஞ்சுவலி ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெய்கணேஷ் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உடல்நலம் தேறியதும் திருநெல்வேலி கொக்கிரகுளம் சிறையில் அவர் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.
திருநெல்வேலியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
திருநெல்வேலி எஸ்.என். ஹைரோட்டில் மாநகராட்சி அலுவலகத்தையொட்டி143 ஆண்டுகள் பழமையான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. திருநெல்வேலி சிஎஸ்ஐ டயோஸிசின் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் இந்தப் பள்ளியில் திருநெல்வேலி மாநகரத்திலிருந்து மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இந்தப் பள்ளியில் நேற்று கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளர் செல்வகுமார், தலைமையாசிரியை ஞானசெல்வி, காண்ட்ராக்டர் ஜான்கென்னடி ஆகியோர் மீது திருநெல்வேலி டவுன் போலீஸார் வழக்கு பதிந்து நேற்றிரவில் கைது செய்தனர்.
இந்நிலையில், பள்ளி தாளாளர் செல்வகுமார், கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி, தலைமையாசிரியை ஞானசெல்வி ஆகியோருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.