பாக்ஸ்கான் தொழிற்சாலை விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு..!!

பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமான விடுதியில் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியது தொடர்பாக விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் ஜமீன் கொரட்டூரில் தனியாா் கப்பல் கட்டும் பொறியாளா் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து, ஸ்ரீபெரும்புதூா் தனியாா் கைப்பேசி உதிரி பாக தொழிற்சாலையில் 2,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மதியம் உணவு உட்கொண்டபோது, சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பூந்தமல்லி தனியாா் மருத்துவமனை, சுற்று வட்டாரங்களில் உள்ள மருத்துவமனைகளில் 175-க்கும் மேற்பட்ட பெண் ஊழியா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பெண்கள் இறந்துவிட்டதாக வதந்தி வெளியானது.

இதையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து விடுதி நிர்வாகம் மற்றும் பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாகம் மற்ற தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்காததால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நள்ளிரவு பணிக்கு வந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 11 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் சனிக்கிழமை காலை 8 மணிவரை நீடித்ததால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேச்சுவார்த்தியில் ஈடுபட்டும் தொழிலாளர்கள் சாலை மறியலை கைவிட மறுத்ததால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரத்திற்கு வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர் ஆர்த்தி, 2 பெண்கள் இறந்ததாக வெளியான தகவல் வதந்தி, உடல்நலம் பாதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்டதாக பரவும் விடியோ தவறானது என தெரிவித்தார்.

தொடர்ந்து இறந்ததாக கூறப்பட்ட 2 பெண்களிடமும் விடியோ அழைப்பு மூலம் பேசி அதனை போராட்டத்தில் உள்ள பாக்ஸ்கான் தொழிலாளர்களிடம் காண்பித்த ஆட்சியர், வதந்திகளை நம்ப வேண்டாம் போராட்டங்களை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமான விடுதியில் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியது தொடர்பாக விடுதி வார்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே