மாஸ்க், வெண்டிலேட்டர்கள் வாங்க ரூ.3 ஆயிரம் கோடி தேவை – மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 9 ஆயிரம் கோடி கோரியிருந்த நிலையில் மேலும் 3 ஆயிரம் கோடி கேட்டுள்ளார் தமிழக முதல்வர்.

பிரதமர் மோடியுடன் காணொளி காட்சி மூலம் நடந்த ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

2019-20-ம் ஆண்டு டிசம்பர்-ஜனவரிக்கான ஜிஎஸ்டி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834லிருந்து 1,965ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க ஏப்., 14ம் தேதி வரை நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஏற்கனவே கேட்டிருந்த ரூ.9000 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

N95 முகக்கவசங்கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் வாங்க ரூ.3000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

2019-2020 நிதியாண்டுக்கான டிசம்பர் – ஜனவரி மாதங்களுக்கான ஜிஎஸ்டி நிதியை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி மற்றும் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மானிய தொகை ஆகியவற்றையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

நகர் மற்றும் புறநகர் பகுதிக்கான தொகையில் 50% தொகையை நிதிக்குழு உடனடியாக விடுவிக்க வேண்டும்.’, என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே