மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும்

மருத்துவப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கரோனா நோய்த் தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அத்தகைய கம்பெனிகளுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

”உலகத் தொற்றுநோயான கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரோனா நோய்த் தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் உற்பத்தியை தமிழ்நாட்டில் மேற்கொள்ள தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புதிய சலுகைகளை முதல்வர் அறிவித்துள்ளார்.

அதன்படி,

1. கரோனா நோய்த் தடுப்புக்கான கீழ்க்காணும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் உற்பத்திக்குச் சலுகைகள் வழங்கப்படும்.

* உள் நுழைவு செயற்கை சுவாசக் கருவிகள் (Invasive Ventilators)

* N-95 முகக் கவசங்கள் (N-95 MASK)

* கரோனா நோய்த் தடுப்புக்கான வைரஸ் எதிர்ப்பு மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள் ((Anti Viral and Anti Malarial drugs used to treat COVID 19)

* தனி நபர் பாதுகாப்புக் கவச உடை ((Personal Protection Equipments as per applicable National standards).

* பல்வகை பண்பளவு கணினித் திரைகள் (Multi Parameter ICU Monitors)

2. மேற்படி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களோ அல்லது புதிய நிறுவனங்களோ தமிழ்நாட்டில் ஜூலை 31, 2020-க்குள் புதிதாக உற்பத்தி செய்யத் தொடங்கினால், சலுகைகள் வழங்கப்படும்.

3. குறு, சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இச்சலுகைகள் பொருந்தும்.

4. தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, மொத்த மூலதனத்தில் 30 சதவீதம் மூலதன மானியம், 20 கோடி ரூபாய் உச்சவரம்பாகக் கொண்டு 5 ஆண்டு காலத்திற்கு சம தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும்.

5. மேற்படி பொருட்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சிறப்பு தொழில் நிறுவனங்களாக (Thrust Sector) கருதப்பட்டு, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள சலுகைகளும் வழங்கப்படும்.

6. மேற்படி பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து நிறுவனங்களும் திட்ட அனுமதி உட்பட அனைத்து வித அனுமதிகளும் பெறுவதற்காக காத்திருக்காமல் உடனடியாக உற்பத்தியைத் தொடங்கலாம்.

உற்பத்தி தொடங்கிய பின்னர் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இவை அனைத்திற்கும் ஒற்றைச்சாளர அனுமதி வழங்கப்படும்.

7. மேற்படி தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப குறுகிய கால அல்லது நீண்ட கால குத்தகை அடிப்படையில் சிப்காட் மற்றும் சிட்கோ நிறுவனங்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் நிலம் / கூடாரங்கள் (Sheds) வழங்கப்படும்.

8. 100 சதவீத முத்திரைத் தாள் கட்டண விலக்கு வழங்கப்படும்.

9. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் செயல்பாட்டு மூலதனக் கடனிற்கான (Working capital) வட்டியில் 6 சதவீதத்தை இரண்டு காலாண்டுகளில் (31.12.2020 வரை) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் மானியமாக அரசு வழங்கும்.

10. மேலும், அடுத்த நான்கு மாதங்களில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளில், குறைந்தபட்சம் 50 சதவீதத்தை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கொள்முதல் (Purchase Guarantee) செய்யும்.

இதற்கென திறந்தவெளி ஒப்பந்தப் புள்ளிகள் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

11. இத்திட்டத்தின்படி உற்பத்தி தொடங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் சலுகைகள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

12. பெரு நிறுவனங்களுக்கு சிப்காட் நிறுவனமும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வணிக ஆணையரகமும் இச்சலுகைகளை வழங்குவதற்கான முகமை நிறுவனங்களாகச் செயல்படும்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே