நாற்காலியில் உட்கார வைத்து கொரோனா நிதி கொடுக்கும் ரேஷன் கடை..!

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொரோனா உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதை வாங்கும் மக்கள் அமர்வதற்கு ஒரு மீட்டர் இடைவெளியில் நாற்காலிகளைப் போட்டு பிறகு ஊர்களுக்கு முன்மாதிரியாக மாறி இருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம்.

மக்கள் வரிசையாக நாற்காலியில் அமர்ந்து இருப்பது விழா மேடைக்கு முன்பு அல்ல புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் நியாய விலை கடை முன்பு.

கொரோனாவால் மக்கள் வருவாய் இழப்பை சந்தித்து இருப்பதால் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் இந்த மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட சமையல் பொருட்கள் விலையின்றியும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி வரும் 14-ஆம் தேதி வரை கொரோனா உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்காக குடும்ப அட்டை தாரர்களின் வீட்டுக்கே சென்று அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.

பல இடங்களில் நியாய விலை கடையில் கூடும் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில், கோடுகள் கிழிக்கப்பட்டு இருந்தன.

ஆனால் பிற ஊர்களுக்கு வழிகாட்டும் வகையில் புதுக்கோட்டை திருகோகர்ணம் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்கள் அமர்வதற்கு 50 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

ஒரு நாற்காலிக்கும் மற்றொரு நாற்காலிக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி விடப்பட்டு இருந்தது.

நியாயவிலைக் கடைக்கு வந்த குடும்ப தலைவர்களும், இல்லத்தரசிகளும் தங்கள் முறை வரும் வரை நாற்காலியில் அமர்ந்து இருந்து உதவித் தொகையை வாங்கி சென்றனர்.

குறிப்பாக இந்த ஏற்பாடு உதவித்தொகை வாங்க வந்த முதியவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து இரண்டு நியாயவிலைக் கடைகள் உள்ளன.

முதற்கட்டமாக 605 கடைகளில் மட்டுமே உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே