புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை

புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா என கண்டறிய சிறப்பு பரிசோதனை முகாம் சட்டமன்ற கமிட்டி அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று ஒருநாள் நடைபெறும் முகாமில் புதுச்சேரியின் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கு RT-PCR (Real time-polymirst chain reaction) முறையில் கொரோனா பரிசோதனை நடக்கிறது.

சிறப்பு முகாமில் முதல்வர் நாராயணசாமி முதல் பரிசோதனையை செய்து கொண்டார்.

அவரைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொண்டையில் இருந்து உமிழ் நீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதன் முடிவுகள் நாளை தெரிய வரும் என சுகாதார துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்தார்.

அரிசி வழங்குவது காய்கறிகளை வழங்குவது என சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் நெருங்கி பழகுவதால் இந்த சோதனை எடுக்கப்பட்டது.

இந்த சோதனை 100 சதவிதம் உண்மையான முடிவைத் தரும்.

விரைவில் களப்பணியில் உள்ளவர்களுக்கு சோதனை செய்யப்படும்.

இதே போல் சந்தேகப்படும் மக்களுக்கு இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சோதனையை நேற்று துவங்கி விட்டோம் என்றும் இயக்குனர் மோகன்குமார் தெரிவித்தார்.

பரிசோதனைக்கு வந்த அரியாங்குப்பம் எம்எல்ஏ ஜெயமூர்த்தி தனது தொகுதியில் 5 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக நீடிப்பதாகவும் அங்கு மருத்துவர்களின் சேவை சிறப்பாக இருப்பதாகவும் கூறி அவர்களது காலில் விழுந்து நன்றி தெரிவித்து கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே