திருவள்ளுவரை காவி உடையில் சித்தரித்த பாஜகவிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழக பாஜகவின் இணையதளத்தில் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் தாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தும் வகையில் தமிழக பாஜக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், காவி உடையில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு இருந்தது.

இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, திருவள்ளுவரின் உண்மையான உடை காவிதான் என்றும், அதற்கு வெள்ளை அடித்தது திமுகதான் என்றும் பாஜகவினர் பதிலடி கொடுத்தனர்.

1970 ஆம் ஆண்டு வரை காவி உடையில் இருந்த திருவள்ளுவரை வெள்ளைக்கு மாற்றி சிறுமை முன்னாள் முதல்வர் கருணாநிதியையே சாரும் என்றும் தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.சேகர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின், தமிழக பாஜகவினருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய திருவள்ளுவரை காவிக்கூட்டம் தம்முடைய கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ் துரோகம் என்று அந்த பதிவில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும் என்று தெரிவித்துள்ள மு க ஸ்டாலின், சாயம் பூசுவதை விடுத்து திருக்குறளைப் படித்து திருந்தப் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே