மாநில அளவிலான ஜூடோ போட்டியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான ஜூடோ விளையாட்டுப்போட்டியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் உரையாற்றியபோது, மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடத்துவதற்கு ஆண்டுதோறும் ரூ.2.63 கோடி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கிராமப்புற இளைஞர்களிடம் விளையாட்டில் உள்ள ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் கிராமங்கள் தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றது.

அனைத்து தரப்பினரிடமும் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு தமிழக அரசால் நடத்தப்படும் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் ஜூடோ, வாள்சண்டை மற்றும் சிலம்பம் ஆகிய போட்டிகள் நமது கரூர் மாவட்டத்தில் நடத்தப்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும்.

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்று தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.2 கோடியும், வெள்ளி வெல்பவருக்கு ரூ 1 கோடியும், வெண்கலப்பதக்கம் வென்றபவருக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிதியினை தமிழக அரசு வழங்கிவருகிறது.

கரூர் மாவட்டத்தில் விரைவில் அதிநவீன உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் காளியப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அமலி டெய்ஸி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *