குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக, அதில் சம்பந்தப்பட்ட 99 தேர்வுகளை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி தடை விதித்துள்ளது.
கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்4 பிரிவில் காலியாக உள்ள சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்தது.
16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர், இந்தத் தேர்வை எழுதினார்கள்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
தேர்வு நடைபெற்று மிகக் குறைந்த நாள்களில் அதாவது 72 நாள்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தேர்வு முடிவுகளை பார்த்ததும், சந்தேகம் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு நகரங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 19 பேர் முதல் 19 இடங்களை பிடித்திருந்தனர்.
முதல் 100 இடங்களில் 39 ரேங்குகளை, குறிப்பிட்ட அந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள் பெற்றனர். இப்படி அவர்கள் சாதிக்க காரணம் என்ன என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி விசாரணையை தொடங்கியது.
முறைகேடு தொடர்பாக டிஜிபி திரிபாதியிடம் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்தது.
இந்த புகாரை சிபிசிஐடி போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.
குரூப் 4 தேர்வு முறைகேடில் திடுக்கிடும் திருப்பமாக மோசடியாளர்களுக்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் சிபிசிஐடியிடம் சிக்கியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்கள் பார்த்தசாரதி, வீரராஜ் ஆகியோர் விசாரணை வளையத்தின்கீழ் வந்துள்ளனர்.
குரூப் 4 தேர்வில் பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்தில் முதன்மை தேர்வு அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர்.
அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வு எழுதியவர்களில், விசாரணை வளையத்தில் உள்ள நபர்கள், அந்த தேர்வு மையங்களில் பணிபுரிந்த அலுவலர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
தேர்வு அதிகாரிகள், இடைத்தரகர்களுடன் சேர்ந்துகொண்டு, குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் ஓஎம்ஆர் ஷீட்டுகளை மாற்றி அதிக மதிப்பெண்கள் பெற வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.
இனிமேல் அவர்களால் அரசு பணி தேர்வுகளை எழுத முடியாது.
உடனடியாக அழியும் சிறப்பு மையை பயன்படுத்தி இந்த தேர்வர்கள் விடைகளை குறித்து விட்டு வந்திருக்கிறார்கள்.
இதன்பிறகு, விடைத்தாள்கள் தேர்வு மையங்களில் வைத்து மறுபடி, சரியான விடையுடன், திருத்தப்பட்டுள்ளது.
இதனால்தான் அவர்கள் இத்தனை மதிப்பெண்கள் எடுக்க முடிந்துள்ளது.
இதனிடையே தரவரிசையில் முதல் நூற்றுக்குள் இடம் பெற்ற 39 தேர்வர்களுக்கு பதிலாக, தகுதி உடைய நபர்கள் தர வரிசையில் சேர்க்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும்.
இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகள் நிகழா வண்ணம், தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.